ஆயக்கலைகள் அறுபத்து நான்கிலும் அழகானது, அற்புதமானது ஆடற்கலை, இயற்கையின் இயக்கங்களான நீரின் அலையிலும் நெருப்பின் நாக்கிலும், தென்றலின் வருடலிலும், மேகத்தின் மின்னலிலும் அவ்வழகை நாம் கண்டூ வியக்கிறோம். இறைவனை வணங்கும் பல வழிகளில் தலையானது நடனம் என ஆன்றோரும், சான்றோரும் கருதுகின்றனர். பிரளயத்தில் உலகம் ஒடுங்கிய பொழுது. ஈசனின் பிரிய, பிரியா பாகமான சக்தி, தோன்றப்போகும் உலகத்தின் க்ஷேமத்திற்காக, சிவனை பூஜிக்கும் தினம் சிவராத்திரி, அப்புண்ணிய தினத்தையொட்டி, தன் தாண்டவங்களில் பிரபஞ்ச இயக்கத்தை காண்பித்த நாட்டியக் கலையின் நாயகனாக, தில்லையம்பல நடராஜனுக்கு காணிக்கையாக கலைஞர்கள் சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவை சிறப்புடன் கொண்டாடுகிறார்கள்.