ஆயக்கலைகள்‌ அறுபத்து நான்கிலும்‌ அழகானது, அற்புதமானது ஆடற்கலை, இயற்கையின்‌ இயக்கங்களான நீரின்‌ அலையிலும்‌ நெருப்பின்‌ நாக்கிலும்‌, தென்றலின்‌ வருடலிலும்‌, மேகத்தின்‌ மின்னலிலும்‌ அவ்வழகை நாம்‌ கண்டூ வியக்கிறோம்‌. இறைவனை வணங்கும்‌ பல வழிகளில்‌ தலையானது நடனம்‌ என ஆன்றோரும்‌, சான்றோரும்‌ கருதுகின்றனர்‌. பிரளயத்தில்‌ உலகம்‌ ஒடுங்கிய பொழுது. ஈசனின்‌ பிரிய, பிரியா பாகமான சக்தி, தோன்றப்போகும்‌ உலகத்தின்‌ க்ஷேமத்திற்காக, சிவனை பூஜிக்கும்‌ தினம்‌ சிவராத்திரி, அப்புண்ணிய தினத்தையொட்டி, தன்‌ தாண்டவங்களில்‌ பிரபஞ்ச இயக்கத்தை காண்பித்த நாட்டியக்‌ கலையின்‌ நாயகனாக, தில்லையம்பல நடராஜனுக்கு காணிக்கையாக கலைஞர்கள்‌ சிதம்பரத்தில்‌ நாட்டியாஞ்சலி விழாவை சிறப்புடன்‌ கொண்டாடுகிறார்கள்‌.

அவ்வமயம் அறிவுக்குரிய வேதமும், ஆயுளுக்குரிய அமுதமும், குடத்தில் திரண்டு உருண்டு, ஒடுங்கிய இப்புண்ணிய க்ஷேத்திரத்தின், தல தெய்வமாய், சிவ லிங்கமாய், அருள்பாலிக்கும் அருள்மிகு ஆதிகும்பேசுவரருக்கு நாட்டிய புஷ்பங்களை அர்ச்சித்து அஞ்சலி செலுத்த விழைந்தோம். அதன்பொருட்டு இசை, நடனம் இவற்றைச் செவ்வனே பேணிய, நல்லிதயம் கொண்ட அமரர் திரு.G.K.மூப்பனார் அவர்களின் சகோதரர் அமரர் திரு.G.R.மூப்பனார் அவர்கள் தலைமையில் 2002-ம் ஆண்டு மலர்ந்த விழாக்குழு பல பிரசித்தி பெற்ற, ஆடல் கலைஞர்களையும், ஆடலாசிரியர்களையும் இத்திருக்குடந்தை வாழ் நன் மக்களின் மனம் மகிழ ஒவ்வொரு வருடமும், கலைஞர்களின் நடன விருந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரருக்கு நைவேத்யமாக வழங்குகிறது. இவ்வாண்டு திருமிகு. G.சந்திரசேகர மூப்பனார் அவர்கள் தலைமையில் 2023 பிப்ரவரி 18,19,20 தேதிகளில் நடக்கவிருக்கும் இவ்விழாவிற்கு தாங்கள் தவறாமல் வந்திருந்து நிகழ்ச்சிகளை ரசித்து, அருள்மிகு மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேசுவரரின் அருளையும், ஆசியையும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

Go To Top